Monday 6 August 2012

இல்லறம் இனிக்க, அவள் உனது ஆடை


இல்லறம் இனிக்க, அவள் உனது ஆடை

எழுதியவர்/பதிந்தவர்/உரை 
- இஸ்மாயில் ஸலபி
இல்லறம் நல்லறமாக அமைந்தால்தான் சமூகம் சலனமில்லாது இருக்கும். அங்கு சாந்தி, சமாதானம் நிலவும். நல்ல சந்ததிகள் உருவாகும். நாடு நலம் பெறும். ஏனெனில், பசுமையான பூமியில் தான் பயிர் பச்சகைள் விளையும். கறடு முறடான பூமி முற்புதர்களையும் களைகளையும் தான் முளைக்கச் செய்யும். எனவே, இல்லறம் குறித்த நல்ல வழிகாட்டல் தேவை. அந்த வழி காட்டல்களை இஸ்லாம் இனிதே வழங்குகின்றது.
அல்குர்ஆன் பல விடயங்களை உதாரணங்கள் மூலமாகவும், உவமானங்கள் மூலமாகவும் விளக்குவதுண்டு. அவ்வகையில் “ஆடை” என்ற ஒப்புவமையை இரவு, இறையச்சம் என்பவற்றுக்கு அல்குர்ஆன் உவமிக்கின்றது. இவ்வாறே கணவன் மனைவி என்கிற உறவையும் இஸ்லாம் ஆடைக்கு ஒப்பிடுகின்றது.
“(மனைவியர்களான) அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், (கணவர்களாகிய) நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள்”. 2:187
மேற்படி வசனம் கணவனை மனைவியின் ஆடை என்றும் மனைவியைக் கணவனின் ஆடை என்றும் கூறுகின்றது. மேற்கத்தேய நாடுகளில் ஆடை மாற்றுவது போல் தமது சோடிகளை மாற்றுவதை இதற்கு நாம் விளக்கமாகக் கொள்ள முடியாது. நாம் ஆடை விடயத்தில் கடைப்பிடிக்கும் நோக்குகள் குறித்து நிதானமாகச் சிந்தித்தால் “ஆடை” என்ற உவமானம் கணவன் மனைவி உறவுக்கு எவ்வளவு தூரம் ஒத்துப்போகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
ஆடை மானம் காக்கும், அவள் கற்பைக் காப்பாள் ஆடை அணிவதன் அடிப்படை நோக்கம் மானத்தை மறைப்பதாகும். ஆடை இல்லாதவன் அவமானப்பட நேரிடும். இல்லறத்தின் அடிப்படை நோக்கம் கற்பைக் காப்பதாகும். அது இல்லா தவன் கற்புத் தவறுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம்.
“இளைஞர்களே! உங்களில் வாய்ப் புள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள்! ஏனெனில், அது பார்வையைத் தாழ்த்தச் செய்யும், கற்பைக் காக்கும்” என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத்(ரலி)
ஆதாரம்:திர்மிதி, நஸஈ, அபூதாவூத், இப்னு மாஜா
வாழ்க்கைத் துணையில்லாத நிலை ஆடையற்ற வாழ்வுக்குச் சமனாகும். எனவே, ஆடை அணியத் தயாராகுங்கள்.
ஆடைத் தெரிவு : 
நாம் ஆடையைத் தெரிவு செய்யும் போது பலவிதமான அம்சங்களைக் கவனத்தில் கொள்கின்றோம். எமக்கு ஆடை அளவாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகின்றோம். அன்றாடம் கூலித் தொழில் செய்யும் ஒருவன் ஆயிரக்கணக்குப் பெறுமதியான ஆடைகளைத் தெரிவு செய்வதில்லை. தன் வருமானத்திற்கு ஏற்றதாக ஆடையைத் தெரிவு செய்கின்றான்.
இவ்வாறே எமது தகுதிக்குத் தக்கதாக ஆடையைத் தெரிவு செய்கின்றோம், மூட்டை சுமக்கும் ஒருவர் கோட் சூட்டைத் தெரிவு செய்யமாட்டார். தெரிவு செய்தாலும் அதற்கேற்ற வாழ்க்கை அவரால் வாழ முடியாது. சாதாரணமாக கோட் சூட் அணிந்த ஒருவனால் மக்கள் நிரம்பி வழியும் போது வாகனத்தில் பயணிக்க முடியாது. சொந்தமாக வாகனம் பிடித்துச் செல்ல வேண்டும். ஒரு பிச்சைக்காரன் தட்டை நீட்டினால் கூட தான் அணிந்திருக்கும் ஆடைக்கு ஏற்ப உதவி செய்ய நேரிடும்.
அடுத்து எமது நிறம், தொழில் என்பவற்றுக்கெல்லாம் தோதான ஆடையையே தெரிவு செய்கின்றோம். ஒரு ஆடைத் தெரிவுக்கே இவ்வாறான முக்கியத்துவம் கொடுக்கின்றோம் என்றால் வாழ்க்கைத் துணை எனும் ஆடையைத் தெரிவு செய்ய இதைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக அவதானம் செலுத்த வேண்டும்.
சிலர் தமது தகுதிக்கு மீறி பணக்கார பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு பின்னர் அதற்கேற்ப வாழ முடியாமல் விழி பிதுங்கி நிற்பதை நாம் அனுபவ வாயிலாக கண்டு வருகின்றோம். அந்தப் பெண் பணக்கார வாழ்வுக்குப் பழக்கப்பட்டிருப்பாள், அவளது தகுதிக்கு ஏற்ப செலவு கொடுக்க முடியாமல் இவன் திண்டாடுவான். அந்தப் பெண் பணக்கார நட்புகளை ஏற்படுத்தியிருப்பாள். எந்த பணக்கார நட்புக்களுடனும் உறவுகளுடனும் இணைந்து செல்ல முடியாமல் இவன் திண்டாடுவான். இவன் வீட்டு விஷேசங்களுக்குப் பணக்காரர்களை அழைக்க நேரிடும். அவர்கள் அவர்களது தகுதிக்கு ஏற்ப அன்பளிப்புக்கள் வழங்குவர். அதேபோன்று அவர்கள் தமது விஷேசங்களுக்கு இவனுக்கு அழைப்பு விடுப்பர். இவன் தனது தகுதிற்கு ஏற்ப அன்பளிப்பு வழங்க முடியாது என்று கௌரவப் பிரச்சினை பார்ப்பான். மனைவியின் தகுதிக்கு ஏற்ப அன்பளிப்பு வழங்க பொருளாதாரம் இடம் கொடுக்காது. இவ்வாறான இக்கட்டுக்களுடன் வாழும் ஒருவனது இல்லறம் இனிமையானதாக இருக்காது. எனவே, மனைவிகணவன் எனும் ஆடையைத் தெரிவு செய்யும் போது மிகுந்த நிதானம் தேவை.
“ஒரு பெண் நான்கு காரணங்களுக்காக மணம் முடிக்கப்படுகிறாள். அவையாவன ;
அவளது பணத்திற்காக,
அவளது குடும்ப கௌரவத்திற்காக,
அவளது அழகிற்காக,
அவளது மார்க்க விழுமியங்களுக்காக.
நீர் மார்க்க முடையவளைப் பற்றிக் கொள். உன் கரத்தை அழிவிலிருந்து பாது காத்துக்கொள்வாய்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
எனவே, அழிவிலிருந்து எம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள மார்க்கமுடைய துணையைத் தெரிவு செய்வோமாக!
ஆடையில் அழகும் அந்தஸ்தும் :
மானத்தை மறைப்பதுதான் ஆடையின் அடிப்படை அம்சம்! எனினும் ஆடையைத் தெரிவு செய்யும் போது வெறுமனே அவ்ரத்தை மறைப்பதை மட்டும் நாம் கவனிப்பதில்லை. அந்த ஆடை எமக்கு அழகைத் தரவேண்டும் என்று விரும்புகின்றோம். அதன் மூலம் எமது உடல் சூடு, குளிரில் இருந்து பாதுகாப்புப் பெற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். ஆடையின் மூலம் அந்தஸ்தை, மகிழ்ச்சியை என பல அம்சங்களையும் நாம் எதிர் பார்க்கின்றோம்.
இல்லற ஆடையாகிய வாழ்க்கைத் துணைக்கும் இந்த அம்சங்கள் பொருந்தும். வெறுமனே பாலியல் உணர்வுகளுக்கு வடிகால் அமைப்பது மட்டும் இல்லறத்தின் நோக்கமல்ல. அங்கே மகிழ்ச்சி நிலவ வேண்டும், கணவன் எனும் ஆடை மூலம் மனைவியும், மனைவி எனும் ஆடை மூலம் கணவனும் சமூகத்தில் பாதுகாப்பையும், அலங்காரத்தையும், அந்தஸ்த்தையும் அடைய வேண்டும். இவர் என் கணவர் என்று சொல்வதன் மூலம் ஒரு பெண்ணுக்கு பாதுபாப்பும், அந்தஸ்த்தும் மகிழ்ச்சியும் ஏற்பட வேண்டும். இவன்தான் உன் கணவனா(?) என்ற ரீதியில் அவள் அவமானத்தையோ, அசிங்கத்தையோ, இவனின் மனைவி என்றால் எப்படிவேண்டுமானாலும் வளைத்துப் போடலாம் என்ற பாதுகாப்பற்ற சூழ்நிலையையோ ஒருபெண் சம்பாதிக்கக் கூடாது.
அவ்வாறே, இவளா உன் மனைவி(?) வேறு ஆள் கிடைக்க வில்லையா? என்ற தோரணையில் ஒரு கணவன் நோக்கப்படும் விதத்தில் மனைவியின் செயல்பாடு அமைந்து விடக்கூடாது.
இவ்வாறே, ஆடை அழகையும், அந்தஸ்தையும் அபயமற்ற நிலைமையையும் தர வேண்டும்.
ஆடையின் தன்மையறிந்து பணி செய்வோம்!
நாம் வெள்ளை நிற ஆடை அணிந்து வயலில் வேலை செய்ய மாட்டோம். மென்மையான ஆடையணிந்து கடின பணிகளில் ஈடுபடமாட்டோம். விளையாட்டுக்கு, வீட்டு வேலைக்கு, ஆலயத்திற்கு, தொழில் செய்வதற்கு என பணிகளுக்கு ஏற்ப ஆடை அணிகின்றோம். ஆடையின் தன்மையறிந்தே செயல்படுகின்றோம். இவ்வாறே இல்லறம் இனிமையாக அமைய வாழ்க்கைத்துணை எனும் ஆடை பற்றிய அறிவும் அதற்கேற்ற செயற்பாடும் அவசியமாகும்.
இல்லற வாழ்வில் இணைந்த இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வேண்டும். மற்றவரின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து, விட்டுக் கொடுத்து அல்லது விட்டுப்பிடித்து செயல்பட அறிந்து கொள்ள வேண்டும்.
சில கணவர்களுக்கு உரிய நேரத்தில் உணவு, தேநீர் இல்லாவிட்டால் கோபம் வரும். சிலருக்கு ஆடைகள் ஒழுங்காக கழுவப்படாவிட்டால் பிடிக்காது. சில பெண்களுக்கு கணவன், தன் குடும்பத்தவர் பற்றிய குறைகளைப் பேசினால் பிடிக்காது. இவ்வாறான பல பிடிக்காத விடயங்கள் இருக்கும். இவற்றைப் புரிந்து, தவிர்ந்து கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். ஒருவர் நெருப்பானால் மற்றவர் பஞ்சாகாமல் நீராக இருக்கத் தெரிந்திருக்க வேண்டும். இவ்வாறு ஆடையை அறிந்து செயல்படும் பக்குவம் இன்பமான இல்லறத்திற்கு இன்றிய மையாததாகும்.
ஆடையின் குறையை மறைப்போம்: 
எமது ஆடையில் ஏதேனும் அழுக்கோ, அசிங்கமோ பட்டுவிட்டால், அல்லது ஏதேனும் கிழிவுகள் ஏற்பட்டுவிட்டால் எமது கௌரவத்திற்காக அதை மறைக்கவே முயல்வோம். அழுக்குப்பட்ட பகுதி வெளியில் தெரியாமல் அணியமுடியுமாக இருந்தால் அதை அப்படியே அணிவோம். இல்லற ஆடையையும் இப்படித்தான் நாம் கையாள வேண்டும். என் கணவர் மோசம், அவர் சரியில்லை. கருமி, முன்கோபக்காரர், மூர்க்கமாக நடப்பவர் என்று மனைவியோ, அவள் சரியில்லை ஒழுக்கமில்லாதவள், ஒழுங்காகப் பேசவோ, நடக்கவோ, சமைக்கவோ தெரியாதவள், ஆணவக்காறி, அடங்காப்பிடாரி என்று கணவனோ வாழ்க்கைத் துணை எனும் ஆடையை அசிங்கப்படுத்தும் முயற்சியில் ஈடுபடக்கூடாது.
ஆடையில் அழுக்குப்பட்டால் :
நாம் எவ்வளவுதான் நிதானமாக நடந்தாலும் எமது ஆடையில் அழுக்குப்படவே செய்யும். அது கசங்கிப்போகும். அதற்காக அதை கழற்றி எறிந்தா விடுகின்றோம். அழுக்கு நீங்கக் கழுவி, மடிப்பு நீங்க அயன் பண்ணி மீண்டும் அணிந்து கொள்கின்றோம். ஏன் சின்னச் சின்ன கிழிசல்களைக் கூட தைத்து மறுபடியும் அணிந்து கொள்கின்றோம்.
இவ்வாறுதான் வாழ்க்கை வண்டி நகர நகர புதிய புதிய பிரச்சினைகள் புற்றீசல் போல் கிளர்ந்து வரலாம். அவை எமது தவறான அணுகு முறைகளால் பூதாகரமாகக் கூட மாறிப் போகலாம். இச்சந்தர்ப்பங்களில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றாற்போல் செயல்பட்டு இல்லற ஆடையைக் கழற்றி எறிந்து விடக் கூடாது. அழுக்குப்பட்டால் கழுவுவது போல், நொறுங்கிப் போனால் அயன் பண்ணுவதுபோல், கிழிந்தால் தைத்துக்கொள்வது போல் சமாளித்துப் போகக் கற்றுக்கொள்ள வேண்டும்.
எந்தவொரு “முஃமினான ஆணும் (தன் மனைவியான) முஃமினான பெண்ணிடம் காணப்படும் சிறு சிறு குறைகளுக்காக அவளைப் பிரிந்துவிட வேண்டாம். அவளிடம் ஏதேனும் ஒன்றை அவர் வெறுத்தால் அவளிடம் இருக்கும் நல்லதைக் கண்டு திருப்தியுறட்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் இதனையே கூறியுள்ளார்கள்.
ஆடையே அவமானமாக மாறல் :
ஆடையில் அழுக்கு நீக்குவது போல் இல்லற ஆடையின் குறைநீக்க இஸ்லாம் வழி கூறுகின்றது.
ஒரு பெண்ணிடம் கணவன் குறைகாணும் போது பின்வரும் வழிமுறைகளையே கையாள வேண்டும்.
01. இதமாக எடுத்துக்கூற வேண்டும். இதனால் அவள் திருந்தவில்லையாயின்
02. படுக்கையை வேறாக்கி அவளை உளவியல் ரீதியாக திருத்த முற்பட வேண்டும். அதனாலும் மாற்றம் ஏற்படவில்லையானால்
03. காயம் ஏற்படாதவாறு இலேசாக அடித்து விவகாரம் விகாரமாகிச் செல்வதை உணர்த்த வேண்டும்.
04. இதுவும் பயன்தராத பட்சத்தில் இருவரது குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்கள் இருவரிடம் விபரத்தைக்கூறி சுமூகமாக தீர்வு காண முயல வேண்டும்.
இதையும் தாண்டிவிட்டால் இருவரும் இனிமையாக இல்லறம் நடத்த முடியாது என்பது உறுதியாகும் போதும் மட்டும் தான் “தலாக்” என்கிற இறுதிக்கட்டத்திற்கு வர வேண்டும்.
ஒருவன் அணிந்த ஆடையே அவனுக்கு அவமானத்தை தருகின்றது என்றால், மானத்தை மறைப்பதற்குப் பதிலாக மானபங்கப் படுத்துகின்றது என்றால், அழகுக்குப் பகரமாக அசிங்கத்தையும், கௌரவத்திற்குப் பகரமாக அவமானத்தையும் தருகின்றது என்றால் அவன் அதைக் களற்றிப்போடுவதே சிறந்ததாகும். இந்த உரிமையை இஸ்லாம் பெண்களுக்கும் வழங்கியுள்ளது. ஆனால், சிலர் துரதிஷ்ட வசமாக இறுதி முடிவையே ஆரம்பத்தில் எடுத்து வருவது தான் ஆச்சரியமாகவுள்ளது.

Thursday 2 August 2012

இல்லற வாழ்வில் புரியாத பாஷை


இல்லற வாழ்வில் புரியாத பாஷை

எழுதியவர்/பதிந்தவர்/உரை 
கணவன்-மனைவிக்கிடையில் நடைபெறும் சில உரையாடல்களும், பேச்சுக்களும் மறுதரப்பால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. ஒருவன் பாவிக்கும் ஒரு வார்த்தை, அதை அவன் உச்சரிக்கும் தொணி, பேசும் நேரம், அதன் போது அவன் வெளியிடும் உணர்வு என்பவற்றுக்கு ஏற்ப அர்த்தம் மாறுபடும். இது இயல்பானதுதான். ஆனால் கணவன் அல்லது மனைவி பேசும் போது அவர் பேசும் பேச்சுக்கு அல்லது வார்த்தைக்குத் தவறான அர்த்தத்தை ஒருவர் எடுக்கும் போது இல்லறத்தில் கலவரம் மூழ்குகின்றது.
இதைப் புரிந்துகொள்ளப் பின்வரும் ஹதீஸை முழுமையாகப் படியுங்கள்!
அபூபக்கர்(ரலி) அவர்களது மகன் காசிம் (ஆயிஷா(ரலி) அவர்களின் சகோதரர்) அறிவிக்கின்றார்கள்;
(ஒருமுறை கடுமையான தலைவலியினால் சிரமப்பட்ட) ஆயிஷா(ரலி), “என் தலை(வலி)யே!” என்று சொல்ல, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “நான் உயிரோடிருக்கும் போதே உனக்கு அது (இறப்பு) ஏற்பட்டு விட்டால் உனக்காக நான் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி உனக்காக (மறுமை நலன் கோரிப்) பிரார்த்திப்பேன்” என்று கூறினார்கள். ஆயிஷா(ரலி), “அந்தோ! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (விரைவில்) இறந்து போய் விடுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள் என்று எண்ணுகிறேன். நான் இறந்து விட்டால் அந்த நாளின் இறுதியிலேயே (என்னுடைய இல்லம் சென்று) நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள். (என்னை மறந்து விடுவீர்கள்)” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் (புன்னகைத்து விட்டு) “இல்லை (உனக்கு ஒன்றும் ஆகாது.) நான்தான் (இப்போது) “என் தலை(வலி)யே!” என்று சொல்ல வேண்டியுள்ளது. (உண்மையில் உன் மீதும், உன் குடும்பத்தார் மீதும் அதிக மதிப்பு வைத்துள்ளேன். எனவேதான் உன் தந்தை) அபூபக்ருக்கும், அவரின் புதல்வருக்கும் ஆளனுப்பி (வரவழைத்து எனக்குப் பின் என் பிரதிநியாகச் செயல்படும்படி) அறிவித்து விட விரும்பினேன். (தாம் விரும்பியவரைக் கலீஃபா என) யாரும் சொல்லி விடவோ, (தாமே கலீஃபாவாக ஆகவேண்டும் என) எவரும் ஆசைப்பட்டு விடவோ கூடாது என்பதற்காகவே (இவ்வாறு விரும்பினேன்). ஆனால், பின்னர் (அபூ பக்ரைத் தவிர வேறொருவரைப் பிரதிநிதியாக்க) அல்லாஹ் அனுமதிக்க மாட்டான்; இறைநம்பிக்கையாளர்களும் (அதை) ஏற்க மாட்டார்கள் என (எனக்கு நானே) சொல்லிக் கொண்டேன். (எனவேதான் அறிவிக்கவில்லை)” என்று கூறினார்கள். (புகாரி 5666)
மேற்படி நபிமொழியில் நபி(ஸல்) அவர்கள், “நீ மரணித்தால் உனக்காக நான் பிரார்த்திப்பேன்” என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறுகின்றார்கள். இது கேட்டுச் சந்தோசப்பட வேண்டிய ஆயிஷா(ரலி) அவர்கள் “அந்தோ! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (விரைவில்) இறந்து போய் விடுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள் என்று எண்ணுகிறேன். நான் இறந்து விட்டால் அந்த நாளின் இறுதியிலேயே (என்னுடைய இல்லம் சென்று) நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள். (என்னை மறந்து விடுவீர்கள்)” என்று கூறுகின்றார்கள். அவர்கள் தலைவலி என்று தனது வருத்தத்தைக் கூறிய போது நபி(ஸல்) அவர்கள் கூறிய சந்தோசமான வார்த்தைக்குத் தவறான அர்த்தத்தை அவர்கள் கற்பிக்கின்றார்கள்.
இது கேட்ட நபி(ஸல்) அவர்கள் ஆத்திரமடையாமல் அமைதியாகத் தனது கூற்றின் அர்த்தத்தையும், அதற்கான காரணத்தையும் விளக்குகின்றார்கள். நபி(ஸல்) அவர்கள், ஆயிஷா(ரலி) அவர்களது வார்த்தையை நூலுக்கு நூல் சட்டப்படி அணுகினால் ஆயிஷா(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களது இயல்பிலும், குணத்திலும் குறை கூறி விட்டார்கள் என அவர்களுக்கு “வழிகேட்டு” அல்லது “முர்த்தத்” பட்டம் கொடுத்திருக்கலாம்.
ஆத்திரத்திலோ, அவசரத்திலோ அல்லது உள்ளமும், உடலும் நலிந்து போகின்ற சூழ்நிலையிலோ பேசக்கூடிய பேச்சுக்களுக்கெல்லாம் சட்டரீதியான தீர்வு காணமுடியாது.
அதேநேரம், அசாதாரணமான சூழ்நிலையில் ஒருவர் பேசிய பேச்சை வைத்து நாட்கணக்கு-மாதக் கணக்குகளுக்கு வியாக்கியாணம் செய்து விரிசலை ஏற்படுத்தவும் முடியாது. இதை இல்லற வாழ்வில் புரிந்துகொள்வது மிக மிக முக்கியமாகும்.
ஆண்கள் சிலபோது பெண்களைச் சீண்டிப் பார்ப்பதற்காக சில வார்த்தைகளை அல்லது செய்திகளை அல்லது வர்ணனைகளைச் செய்யலாம். அதில் விளையாட்டுணர்வுதான் காரணமாக இருக்கும். ஆண்கள் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்வது போன்று பெண்கள் எடுத்துக்கொள்வதில்லை. அவர்கள் அதிகம் சென்டிமென்ட் (உணர்ச்சிபூர்வமாகப்) பார்ப்பார்கள்.
எனவே, வேடிக்கையாகப் பேசிய பேச்சுக்கள் அவர்களது நாவில் வேம்பாகவும், நெஞ்சில் வேலாகவும் பாய்ந்து வேதனையை உண்டுபண்ணலாம். எனவே விளையாட்டு விபரீதமாகி விடக்கூடாது என்பதில் கணவனும் கரிசனையாக இருக்க வேண்டும். இதையெல்லாம் அலட்டிக்கொள்ளக் கூடாது என்ற விரிந்த மனதும் மனைவியிடம் இருந்தாக வேண்டும்.
பேசும் பேச்சு மட்டுமன்றி மௌனம் கூடச் சிலபோது தவறான விளக்கத்தைக் கொடுக்கலாம். கணவனோ, மனைவியோ ஏதோ சில காரணங்களாலோ, கஷ்டங்களாலோ மௌனமாக இருக்கலாம். இந்த மௌனத்திற்குக் கூட பல அர்த்தங்கள் கற்பிக்கப்படுகின்றன. என்னோடு கோபித்துக் கொண்டுதான் அவர் பேசாமல் இருக்கின்றார். காலையில் தேனீர் கொடுக்கத் தாமதமானதற்குத்தான் உம்முண்டு இருக்கிறார். இந்தச் சின்ன விஷயத்துக்கெல்லாம் இப்படி முகத்தைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு இருக்க வேண்டுமா? இப்படி ஏதோ ஒரு அர்த்தத்தை தானே கற்பித்துக்கொண்டு கற்பனையில் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருப்பார்கள். இது கூட இல்லறத்தில் சில பிரச்சினைகள் தோன்றக் காரணமாக அமைந்து விடுகின்றது.
சிலபோது பெண்கள் உள்ளத்தில் ஒன்றை எதிர்பார்த்து ஏதோ சில வார்த்தைகளைப் பேசுவார்கள். இது கேட்ட ஆண்கள் அவர்கள் பேசிய பேச்சை தர்க்கரீதியாகச் சிந்தித்து எதிர்க்கேள்வி கேட்பார்கள். அந்தக் கேள்வி எடக்கு-முடக்காகக் கூட அமைந்து விடுவதுண்டு.
சிலபோது மனைவி வேலை செய்து அலுத்துக்கொண்டு அந்த அலுப்பில் கணவனைப் பார்த்து, “நீங்களும் கொஞ்சம் வீட்டு விடயங்களில் கவனம் செலுத்துங்கள்!” என்று கூறலாம் அல்லது வேலைப் பழுவோடு இருக்கும் போது குழந்தைகள் குறும்புத்தனம் செய்தால், “பிள்ளைகள் விஷயத்தில் நான் மட்டுமா கஷ்டப்பட வேண்டும்? நீங்களும் பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள்!” என்று கூறலாம்.
இதைக் கேட்ட கணவன் வார்த்தைக்கு வார்த்தை அகராதியைப் பார்த்து அர்த்தம் பார்த்தால் வாழ்க்கை வண்டி சீராக ஓடாது. ஆனால் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கணவன், எடுத்த எடுப்பில் “அப்ப நான் வீட்டு விஷயத்தில, புள்ள விஷயத்தில கவனம் எடுக்கல்லண்டு சொல்றியா?” எனக் கேட்கும் போது மனைவியும், “என்னத்தப் பெரிசா செஞ்சி கிழிச்சிட்டீங்க?” என்று தொடரும் போது தொல்லைகள் தொடர் கதையாவது தவிர்க்க முடியாததாகும்.
உண்மையில் வீட்டுப் பணிகளில் கணவனும் கூட இருந்து ஒத்துழைத்தால் உதவியாக இருக்கும் அல்லது நான் வீட்டு வேலை செய்துகொண்டிருக்கும் போது கணவன் குழந்தைகளைக் கொஞ்சம் கவனித்துக்கொண்டால் உதவியாக இருக்குமே! என்ற ஏக்கத்தைக் கணவன் புரிந்துகொள்ள வேண்டும். தனது உணர்வை இந்த மறமண்டை புரிந்து கொள்ளவில்லையே! என்று கோபம் கொந்தளிக்கும் போது அடுத்த கட்டமாக அவளிடமிருந்து வரும் பதில் பாரதூரமாக அமைந்து விடுகின்றது.
சிலபோது மனைவி வேலை செய்து கொண்டிருப்பாள்; கணவன் ஓய்வாக இருப்பார் அல்லது பத்திரிகை வாசித்துக்கொண்டிருப்பார். இந்த நேரத்தில்மனைவி அலுத்துப் போய், “தனியாக இருந்து என்னால மாடு மாதிரி சாகமுடியாது!” என்ற தொணியில் தொணதொணப்பாள். சிலபோது இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சில விளையாட்டுக் கணவர்கள், “ஓ! வயசு போனால் அப்படித்தான்!” என்று ஏதாவது சொல்லும் போது மனைவிக்குப் பத்திக்கொண்டு வரும். அவளும், “நான் மட்டுந்தானே கிழவி? இவர் மட்டும் பெரிய பொடியண்டு நினைப்பாக்கும்!..” என்று தொடரலாம். இதை விளையாட்டாகவோ எடுத்துக் கொண்டால் வினையில்லை.
சில கணவர்கள் இதுபோன்ற சந்தர்ப்பத்தில் விளையாட்டுக்காக “ஒனக்குத் தனியாக வேல செய்ய இயலாது என்பதற்காக என்னை இன்னொரு கலியாணமா கட்டச் சொல்றாய்?” என்று கேட்பார்கள். எரியும் நெருப்பில் எண்ணைய் வார்ப்பது போல் இப்படிப் பேசும் போது, “ஒரு பொண்டாட்டிய வெச்சி ஒழுங்காப் பாக்கத் தெரியாத ஒங்களுக்கெல்லாம் ரெண்டாம் பொண்டாட்டி கேக்குதோ!?” என்ற தொணியில் தொடரலாம். இது கணவனை உசுப்பேற்றி விட்டால், “ஒனக்கு நான் என்ன கொற வெச்சேன் சொல்லு!” என விளையாட்டு வெற்றியை நோக்கி நகரத் துவங்கி விடும்.
சிலபோது மனைவி வீட்டை ஒழுங்குபடுத்தி அழுத்துப் போனால், “வீடு குப்பையாக இருக்குது. இங்கால சரியாக்கும் போது அங்கால குழம்பியிருக்குதே!” என அலுத்துக்கொள்வாள். சில கணவர்கள் நான் வீட்டைக் குழப்பியடிப்பதைத்தான் இவள் இப்படிச் சொல்கிறாள் என்ற தொணியில் பேசுவர். சில வேளைகளில் இதே விஷயத்தை மனைவியர் கொஞ்சம் உப்பு-புளி சேர்ந்துச் சொல்வர். அது கணவனை உசுப்பேற்றி விட, “இந்த வீட்ட நானா குழப்பியடித்தேன்?” என்ற தொணியில் பேசும் போது பிரச்சினையாகின்றது.
இப்படி ஏராளமான உதாரணங்களைக் கூறலாம். இதற்கெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் பார்க்காமல் அடுத்தவரது உடல்-உள நிலவரங்களைப் புரிந்து விட்டுக் கொடுத்து அல்லது விலகிச் சென்று பழகவேண்டும்.
இதற்கான சில வழிகாட்டல்களை வழங்குவது நல்லது என நினைக்கின்றேன்.
(1) கணவன் – மனைவியையும், மனைவி கணவனையும் புரிந்துகொள்ள வேண்டும். ஆண்-பெண் இரு பாலாரின் இயல்பான குணங்களையும், தமது வாழ்க்கைத் துணையின் இயல்புகள், குணங்கள், பழக்க-வழக்கங்களையும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
(2) ஆண் சிந்திக்கும் விதமும், பேசும் முறையும் பெண்ணினது சிந்தனை, பேச்சு என்பவற்றை விட மாறுபட்டதாகும். இதையும் இரு சாராரும் இதயத்தில் இறுத்திக்கொள்ள வேண்டும்.
(3) இருவரும் இருவரது பேச்சையும் முறையாகப் புரிந்துகொள்ள முற்பட வேண்டும். தவறாகப் புரிந்துகொண்டு அந்தத் தவறான புரிதலின் அடிப்படையில் தப்பான எண்ணங்களை வளர்த்துக்கொள்ளக் கூடாது.
(4) கணவனைப் பொறுத்தவரை மனைவியின் பேச்சுக்குச் செவிகொடுக்க வேண்டும். ஏனெனில் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்த இருக்கும் ஒரே ஊடகம் பேச்சுத்தான். அவளது உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பளிக்கின்றீர்கள் என்பதை அவளின் பேச்சுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை வைத்தே அவள் அறியமுடியும். எனவே நீங்கள் கொஞ்சம் செவிகொடுங்கள்!
அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் சுமார் 300 வார்த்தைகள் அடங்கிய நீண்ட ஒரு சம்பவத்தைக் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் அதை அப்படியே கேட்டு விட்டு ஆயிஷா(ரலி) அவர்கள் திருப்திப்படும் அளவுக்கு ஒரு செய்தியையும் முடிவுரையாகக் கூறினார்கள்.
- S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

கணவரை மகிழ்விப்பது எப்படி?


கணவரை மகிழ்விப்பது எப்படி?

எழுதியவர்/பதிந்தவர்/உரை 
தமிழில்: Mufti
(குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் பெண்ணும் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை)
மனைவியின் அழகிய வரவேற்பு
  • பணியிலிருந்தோ அல்லது பயணத்திலிருந்தோ கணவன் வீட்டிற்கு வரும்போது அவரை நல்ல வார்த்தைகள் கூறி வாழ்த்துக்களுடன் வரவேற்று உபசரியுங்கள்.
  • முகமலர்ச்சியுடன் கணவரை எதிர்கொள்ளுங்கள்.
  • உங்களை அழகுபடுத்தி, உங்கள் கணவருக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்ளுங்கள்.
  • சந்தோஷமான செய்தியை முதலில் தெரிவியுங்கள், கவலையான செய்தி ஏதேனும் இருந்தால் உங்கள் கணவர் அமைதி அடையும்வரை பிற்படுத்தி வையுங்கள்.
  • அன்பான, அரவணைப்பான வார்த்தைகளை உங்கள் கணவரிடத்தில் பயன்படுத்துங்கள் (வேலையிலோ அல்லது வரும் வழியிலோ ஏதாவது பிரச்சினைகளைச் சந்தித்திருக்கலாம்).
  • கணவருக்காக அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட உணவை, சரியான நேரத்திற்குள் பரிமாறுங்கள் (கணவருடன் சேர்ந்து உண்ணும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்).
இனிய குரலும் தேவையான கனிவும்
  • உங்கள் கணவரிடம் மென்மையான குரலில் அழகாக, அன்பாகப் பேசுங்கள். கணவரைத் தவிர வேறு எந்த ஆணிடமும் – குறிப்பாக – மஹரம் அல்லாத ஆண்களுக்கு முன்னால் குழைந்து பேசக்கூடாது என்பதை மறந்துவிடவேண்டாம்.
  • உங்கள் கணவரிடத்தில் “உம்!! இல்லை!!” என்று அரைகுறையாகப் பேசி, அவரின் பேச்சை உதாசீனப்படுத்தாதீர்கள்
நறுமணமும் அலங்கரிப்பும்
  • உடலை அழகு-ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சிரத்தையுடன் முயற்சி செய்யுங்கள். (வீட்டு வேலைகளை வேலைக்காரியோ அல்லது இயந்திரங்களின் உதவியோ இன்றி நாமே செய்ய முயற்சி செய்யவேண்டும். இதனால் உடல் ஆரோக்கியத்தையும் உடல் அழகையும் பேணுவதோடு பணச்செலவையும் குறைக்கலாம்).
  • உங்கள் கணவரோடு தனித்திருக்கும் வேளையில் மட்டும் மெல்லிய ஆடைகளைப் பயன்படுத்துங்கள்.
  • தினமும் குளித்து உடலை சுத்தமாக வைத்துக்கொள்ளும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் சுத்தமாக வைத்துக்கொள்ளுவதில் அதிகமாக அக்கறை செலுத்துங்கள்
  • வீட்டிற்கு கணவன் வருவதற்கு முன்னால் உங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள். (அழுக்கான ஆடையுடன் முகத்தில் எண்ணெய் வடிந்திருக்கும் நிலையில் உங்கள் கணவரிடம் செல்லாதீர்கள்).
  • தடுக்கப்பட்ட முறையில் அதாவது ஹராமான முறையில் அலங்கரித்துக் கொள்ளக்கூடாது. (உதாரணமாக புருவத்தை மழித்துக் கொள்ளுதல், ஒட்டுமுடி வைத்துக் கொள்ளுதல்).
  • கணவனுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியம், கலர் துணிவகைகள் ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள்.
  • முடி அலங்காரம், வாசனைத் திரவியங்கள், உடையின் வண்ணம் மற்றும் மாடல் ஆகியவற்றை கணவன் ரசிக்கும்படி அடிக்கடி மாற்றுங்கள். இவை அனைத்தும் மஹரம் இல்லாத ஆண்களுக்கு (திருமணம் முடிக்க தடை இல்லாத ஆண்களிடம்) வெளிப்படுத்துவது ஹராம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது: “அனைவரையும் விடச் சிறந்த பெண் (மனைவி) யார்?” அண்ணலார் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “எந்தப் பெண் தன் கணவன்தன்னைப் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பாளோ, அவன் கட்டளையிட்டால் அவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பாளோ, தன் விஷயத்திலும் தன்னுடைய பொருளிலும் தன் கணவனுக்கு விருப்பமில்லாத எந்தப் போக்கையும் மேற்கொள்ளமாட்டாளோ அத்தகையவளே, அனைவரையும் விடச்சிறந்தவள்” ( நஸயீ).
இனிய வாழ்வின் திறவுகோல் தாம்பத்தியமே
திருமணத்தில் இணையும் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் தங்களது இயற்கையான உடல் தாகங்களை (அனுமதிக்கப்பட்ட முறையில்) செம்மையாகப் பகிர்ந்து கொள்வது இஸ்லாமியத் திருமணத்தின் முக்கிய குறிக்கோளாகும் என நபி (ஸல்) அவர்கள் உணர்த்தினார்கள் (புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ).
“கணவன் தாம்பத்தியத்திற்காக மனைவியை அழைத்து, அவள் காரணமின்றி மறுத்து, அதனால் கணவன்அவள்மீது கோபங்கொண்டு அவ்விரவைக் கழித்தால், விடியும்வரை வானவர்கள் அப்பெண்ணை சபித்துக்கொண்டே இருப்பார்கள்” என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள் (புகாரி, முஸ்லிம், அஹ்மத்).
நபி (ஸல்) அவர்கள் தெளிவாக்கினார்கள்: “கணவன்ஊரிலிருக்கும்போது அவனது அனுமதியின்றி எந்தப் பெண்ணும் (நஃபிலான) நோன்பு நோற்பது கூடாது. மேலும் தனது வீட்டில் கணவன் அனுமதியின்றி எவரையும் அனுமதிக்கக் கூடாது” (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், தாரமி).
  • உங்கள் கணவனுக்குத் தாம்பத்திய உறவு அவசியம் தேவை என்கிற சூழ்நிலையில் அதனை முதன்மைப் படுத்துங்கள் (பிறர் தவறாக எண்ணுவார்கள் என்றோ ஏதாவது பேசுவார்கள் என்றோ தள்ளிப்போடாதீர்கள்).
  • உங்களுடைய உடலை சுத்தமாகவும் வாசனையாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.
  • கணவருடன் இனிய மொழியில் காதலைப் பரிமாறிக் கொள்ளுங்கள். (குடும்பத்தின் பிரச்சினைகளை மறந்துகூட அப்பொழுது வெளிப்படுத்தாதீர்கள். இல்லையென்றால் சந்தோஷமான சூழ்நிலையை சங்கடமான சூழ்நிலையாக அது மாற்றிவிடக்கூடும்)
  • உங்கள் கணவர் திருப்தி அடையும்வரை ஒத்துழையுங்கள்
  • தோதான நல்ல சூழ்நிலைகளில் உங்கள் கணவரை தாம்பத்தியத்திற்கு ஊக்குவியுங்கள் (உதாரணமாக வெளியூர் பயணத்திலிருந்து திரும்பியபோது அல்லது கணவருக்கு அமைதி தேவை என்னும் பட்சத்தில்).
அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு திருப்தி கொள்வது
  • உங்களுடைய கணவன் ஏழையாகவோ சாதாரண வேலையிலோ இருந்தால் அதற்காக வாழ்க்கையை வெறுத்துவிடாதீர்கள். (பிறரின் கணவர்கள்போல் நீங்கள் இல்லையே என ஒப்புமையும் செய்யாதீர்கள். அது உங்கள் கணவருக்கு உங்கள்மீது வெறுப்பை உருவாக்கும்).
  • ஏழைகள், உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள், ஊனமுற்றோர்கள் போன்ற நம் நிலைக்குக் கீழாக உள்ளவர்களைப் பார்த்தேனும் இறைவன் நம்மை இந்த நிலைக்கு உயர்த்தி வைத்திருப்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள்.
  • தன்னம்பிக்கையும் கணவருக்கு நீங்கள் அளிக்கும் ஊக்கமும்தான் உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
  • உலக விஷயத்திலேயே மூழ்கிவிடவேண்டாம்
  • இவ்வுலக வாழ்க்கை மட்டும்தான் நமக்கு நோக்கம் என்று இருந்திட வேண்டாம்.
  • இதன் அர்த்தம் அல்லாஹ் அனுமதித்த இன்பங்களை அனுபவிக்கக் கூடாது என்பதல்ல, மறுமையின் சுகவாழ்வுக்கு எதிரான விஷயங்களைக் கவனமாகத் தவிர்த்து வாழ வேண்டும் என்பதே.
  • உங்கள் கணவரின் செலவைக் குறைக்கச் சொல்லி அதனை தர்மம் செய்யவும், ஏழைகளுக்கும் தேவைப்படும் மக்களுக்கும் கொடுக்க ஆர்வம் ஊட்டுங்கள்
  • அவசியம் இல்லாத பொருள்களை வாங்கிக்கேட்டு கணவனை நச்சரிக்காதீர்கள். (உங்கள் பெற்றோர் வீட்டில் கிடைத்த மாதிரி கணவனிடம் எதிர்பார்க்காதீர்கள். உங்கள் கணவனின் வசதிக்கேற்ப உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்).
பொருட்செல்வமும் பிள்ளைச் செலவமும் இவ்வுலக வாழ்வின் கவர்ச்சியாகும். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும் எதிர்பார்க்கப் படுவதில் சிறந்ததுமாகும். (அல்குர்ஆன் 18:46).
கணவனின் உதவியை வரவேற்றல் நன்றி செலுத்துதல்
  • நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “பெரும்பான்மையான பெண்கள் கணவனின் உதவியை நிராகரித்ததன் காரணமாக அவர்களை நரகத்தில் பார்த்தேன்” என்பதாக. எனவே கணவன் செய்த உதவிகளை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்
  • உங்கள் கணவரின் உதவிகளுக்கு நன்றி செலுத்தும்போது உங்கள் கணவரை மேலும் உதவி செய்பவராகவும் உங்களைப் பலவழிகளில் சந்தோஷப் படுத்துபவராகவும் காண்பீர்கள்
  • உங்கள் கணவரின் நன்றியை மறக்கும்போது, உங்கள் கணவர் “இவளுக்குக் கூடுதலாக நல்லது செய்து என்ன பயன்?” என்று தன்னைத்தானே நொந்து கொள்வார்”
உறுதுணையும் உதவியும்
  • உங்கள் கணவருக்கு ஏதேனும் விபத்தின் காரணமாக ஊனம் ஏற்பட்டுவிட்டால் அல்லது வியாபாரத்தில் நஷ்டமடைந்துவிட்டால் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்ட சொந்தத் தொழில் மூலமாகவோ மற்றும் உங்கள் சொத்தின் மூலமாகவோ கணவனுக்குத் ‘தோள்’ கொடுங்கள்
கட்டுப்படுதல்
“ஒரு பெண் தனது ஐவேளைத் தொழுகையை(செம்மையாக)த் தொழுது (ரமழான்) மாதத்தில் நோன்பு நோற்று, தனது கற்பையும் காத்துக்கொண்டு (இறை ஆணைகளுக்கு மாற்றமில்லாத காரியங்களில்) தன் கணவனுக்குக் கட்டுப்பட்டும் நடந்து கொண்டால், ‘நீ விரும்பும் எந்த வாயில் வழியாக வேண்டுமானாலும் சுவர்க்கத்தில் நுழையலாம்” என அவளிடம் (மறுமையில்) கூறப்படும்” என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (தப்ரானி, முஸ்னத் அஹ்மத்).
“ஒருவர் மற்றொருவருக்கு சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்யலாமென அனுமதி இருந்தால் மனைவியைக் கணவனுக்குத் தலை வணங்கி சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்ய ஆணையிட்டிருப்பேன்” என ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவூத், நஸயீ, திர்மி, இப்னுமாஜா, பைஹகி).
  • கணவனுடைய அத்தனை கட்டளைகளையும் நிறைவேற்றுங்கள் – அது இறைவனுக்கு மாற்றமாக இல்லாதபோது
  • ஓர் இஸ்லாமியக் குடும்பத்தில் கணவன் தலைவன் என்பதையும்மனைவி கணவனுக்கு உதவி செய்பவள் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.
அமைதிப்படுத்துங்கள் (கோபமாக இருக்கும் போது)
  • முதலாவதாக, கணவரை எது கோபப்படுத்துமோ அச்செயலை/பேச்சைத் தவிர்த்துவிடுங்கள். அப்படி தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சமாதானப் படுத்துங்கள்.
  • நீங்கள் பிழை செய்திருந்தால் மன்னிப்புக் கேளுங்கள். (கோபமான சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் வீசிக் கொள்ளும் உப்பு-சப்பு பெறாத வார்த்தைகள்தான் விவாகரத்தில் முடிகிறது என்பதை எல்லோருமே அறிவார்கள்).
  • கணவர் தவறு செய்திருந்தால் அதனை நல்ல சூழ்நிலை பார்த்து சொல்ல முயற்சி செய்யுங்கள். அல்லது அவருடைய கோபம் குறையும்வரை அமைதியாகக் காத்திருந்து சாந்தமான முறையில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்.
  • குடும்பத்துக்கு அப்பாற்பட்ட விஷயத்தில் கணவர் கோபமுற்று இருந்தால், கோபம் குறையும்வரை காத்திருந்து பிறகு அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்யுங்கள். (உதாரணமாக வேலையில் பிரச்சினை, மற்றவர்களால் அவமானப் படுத்தப்பட்டிருத்தல்).
  • அவருடைய பிரச்சினைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு அந்தக் கோபமான நிலையிலேயே பற்பல கேள்விகளை எழுப்பி தொந்தரவு செய்யாதீர்கள்.
  • “என்ன நடந்தது? என்று நீங்கள் சொல்லித்தான் ஆகவேண்டும்” என்றோ “எது உங்களை கோபப்படுத்தியது? என்று எனக்கு தெரிந்துதான் ஆகவேண்டும்” என்றோ “நீங்கள் எதையோ மறைக்கிறீர்கள்! அதைத் தெரிந்து கொள்வதற்கு எனக்கு முழு உரிமை இருக்கின்றது!” என்றோ கேள்விக் கணைகளை எழுப்பி எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றாதீர்கள்.
பாதுகாப்பது (கணவர் வீட்டில் இல்லாத போது)
“இன்னும், முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்;. தங்கள் அலங்காரத்தை அதினின்று (இயல்பாக வெளியில்) தெரியக் கூடிய(கைகள், முகத்)தைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்” (அல்குர்ஆன்: 24:31).
மேலும் அல்லாஹ் கூறுகிறான்: “நல்லொழுக்கமுள்ளமனைவியர் (தங்கள் கணவனிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவர்) இல்லாத சமயத்தில் அவர்களின் (செல்வம், உடைமை, மானம், மரியாதை) அனைத்தையும் பாதுகாப்பவர்களாகவும் இருப்பார்கள். (தங்கள் கணவருக்கு மாறு செய்ய மாட்டார்கள்)” (அல்குர்ஆன்: 4:34).
  • தடுக்கப்பட்ட நட்புகளைவிட்டும் உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்
  • குடும்பத்தின் ரகசியங்களை மற்றவரிடம் சொல்லாதீர்கள். (முக்கியமாக தாம்பத்தியம் மற்றும் உங்கள் கணவர் பிறரிடம் சொல்ல விரும்பாத விஷயங்கள்).
  • வீட்டில் உள்ள பொருள்களையும் குழந்தைகளையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
  • கணவனுடைய பணத்தையும் சொத்துக்களையும் பாதுகாத்து வையுங்கள்.
  • கணவனுடைய அனுமதியின்றி வீட்டைவிட்டு வெளியேறாதீர்கள்.
  • அப்படியே உங்கள் கணவர் அனுமதித்தாலும் முழு ஹிஜாபுடனும் பாதுகாப்புடனும் வெளிச் செல்லுங்கள்.
  • உங்கள் கணவருக்குப் பிடிக்காதவர்களை வீட்டிற்குள் வர அனுமதிக்காதீர்கள்.
  • மஹரம் இல்லாத ஆண்களை நீங்கள் தனியாக இருக்கும் இடங்களில் அனுமதிக்காதீர்கள். (கணவனுடைய சகோதரர்கள், தாயின் சகோதரி மகன்கள், தந்தையின் சகோதரனின் மகன்கள் – போன்றவர்கள்தானே என்று அலட்சியமாக இருக்காதீர்கள்).
  • கணவருடைய பெற்றோர்களுடனும் உறவினர்களுடனும் நல்லபடியாக நடந்து கொள்ளுங்கள் – குறிப்பாக – கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில்.
பொறுமையும் பாதுகாப்பளித்தலும்
  • கஷ்டங்களை எதிர்கொள்ளும்போது பொறுமையுடன் இருங்கள்.
  • வாழ்க்கையில் இழப்புகள் சோதனைகள் (உங்களுக்கு, உங்கள் கணவருக்கு, குழந்தைகளுக்கு, உறவினர்களுக்கு, சொத்துக்களுக்கு…) ஏற்படும்போது இறைவனின் கூலியை எதிர்பார்த்து பொறுமை கொள்வது அவசியம் (உதாரணமாக : நோய், விபத்துகள், இறப்புகள்…).
  • அழைப்புப்பணியில் துன்பங்கள் ஏற்படும்போது (சிறைபிடிக்கப்படுதல், ஊனமாக்கப்படுதல் …) பொறுமையுடன் இருந்து கணவரை மீண்டும் அல்லாஹ்வுடைய பாதையில் சுவர்க்கத்தை வேண்டி தியாகம் செய்ய உற்சாகப்படுத்துங்கள்.
  • உங்களிடம் உங்கள் கணவர் மோசமாக நடந்து கொள்ளும் வேளையிலும் அவரிடம் நீங்கள் நல்ல முறையாக நடந்து பாடம் புகட்டுங்கள். (இவள் நம்மீது இவ்வளவு அன்பு பொழியும்போது நாம் ஏன் இவளிடம் நல்ல முறையாக நடந்தக் கொள்ளக்கூடாது என்று நினைத்து வருந்தி தன் தவறுகளைத் திருத்திக் கொள்வார்).
இறைவனுக்கு அடிபணிவதிலும் அழைப்புப்பணி, தியாகம் ஆகியவற்றிலும் உதவியாக இருத்தல்
  • உங்கள் கணவருடன் ஒத்துழையுங்கள். கடமையான மற்றும் உபரியான வணக்கங்களை அவருக்கு நினைவுபடுத்துங்கள்.
  • இரவுத் தொழுகை தொழ அவருக்கு ஆர்வமூட்டுங்கள்.
  • அல்குர்ஆனை கேட்பதிலும் படிப்பதிலும் தனித்தும் கணவருடன் சேர்ந்தும் ஈடுபடுங்கள்.
  • இஸ்லாமிய பயான் கேஸட்டுகளைத் தனியாகவும் கணவருடனும் சேர்ந்தும் கேளுங்கள் (இருவரும் புரிந்து கொண்ட முக்கிய கருத்துகளை ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்து கொள்ளுங்கள்).
  • சுப்ஹுத் தொழுகைக்குப் பின்னரும், மஃரிப் தொழுகைக்கு முன்னரும் திக்ரு(இறைநினைவு)களில் ஈடுபடுங்கள்.
  • பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் செய்யப்படும் அழைப்புப் பணிகளில் உங்களையும் உட்படுத்திக் கொள்ளுங்கள்.
  • இஸ்லாமிய சட்டங்களையும் பெண்களுக்குரிய நல்ல பண்புகளையும் கற்றுக் கொண்டு செயல்படுத்துங்கள்.
  • உங்களுடைய அன்புக் கணவருக்கு ஒத்தாசையாக இருந்து அவரை ஊக்கப்படுத்தி, அவருக்குத் தேவையான நல்ல கருத்துகளைச் சொல்லி அவரின் துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.
  • உங்களுடைய பகுதி நேரத்தை ஒதுக்கி, கணவருடன் சேர்ந்து அழைப்பு பணிகளில் ஈடுபடுங்கள்.
  • அவசியமான நேரத்தில் அனைத்து தியாகங்களையும் செய்ய உங்கள் கணவருக்கு ஆர்வமூட்டி நீங்களும் உங்கள் குழந்தைகளும் அல்லாஹ்வுடைய பாதுகாப்பில் இருப்பதை நினைவுபடுத்துங்கள்.
அழகிய வீட்டுப் பராமரிப்பு
  • வீட்டை சுத்தமாகவும், அழகாகவும் நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ளுங்கள்
  • பொழுது போகாத நேரங்களில் வீட்டுப்பொருள்களை சீர்படுத்தி வையுங்கள். உங்கள் கைகளால் தயாரித்த அலங்காரப் பொருள்களைக் கொண்டு வீட்டை அழகுபடுத்துங்கள். (உங்கள் கணவர் மிக சந்தோஷம் அடைவார்).
  • தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான உணவுகளையும் புதிய வகையான உணவுகளையும் தயாரித்து உங்கள் கணவருக்கும் குழந்தைகளுக்கும் கொடுங்கள்.
  • அனைத்து வீட்டு வேலைகளையும் நேர்த்தியாகச் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
  • குழந்தைகளை எப்படி இஸ்லாமிய வழியில் வளர்ப்பது, பராமரிப்பது என்பதைக் கற்றுக்கொண்டு செயல்வடிவத்தில் வெளிப்படுத்துங்கள்.
குடும்பத்தையும் சொத்துக்களையும் பராமரித்தல்
  • கணவனுடைய பணத்தை, அவருடைய அனுமதி இல்லாமல் செலவழிக்காதீர்கள். (அது தர்மமாக இருந்தாலும் சரி. ஆனால், உங்கள் கணவர் உடன்படுவார் என்பது தெரிந்தால் செய்யலாம்).
  • வீடு, வாகனம் போன்றவற்ளை கணவன் வீட்டில் இல்லாத போது பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
  • குழந்தைகளை சுத்தப்படுத்தி நல்ல ஆடைகளை அணிவித்து அழகூட்டுங்கள். குழந்தைகளுடைய பாதுகாப்பு மற்றும் கல்வி விஷயங்களில் பேணி நடந்து நல்ல பண்புகள், இஸ்லாமிய அறிவு, நபிமார்களின் சரித்திரங்கள் நபித்தோழர்களின் தியாகங்கள் ஆகியவற்றையும் போதியுங்கள்.
நல்ல மனைவி சுவர்க்கத்தின் துணைவி
  • நல்ல பெண்களுக்கு முன்மாதிரியாக நபித்தோழியர் கதீஜா, ஆயிஷா, உம்மு ஸலமா மற்றும் உம்முசுலைம் (ரலி) போன்றவர்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
  • கெட்ட பெண்களை அல்லது நடிகைகளைப் பின்பற்றுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
  • கணவனுக்கு சமயோசித முடிவுகள் தேவையானபோது சொல்லிக் கொடுங்கள். (முதலில் அதற்கான அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்).
  • கணவனுடைய திருப்தியைப் பெற்ற நிலையில் எப்பொழுதுமே இருக்க முயற்சி செய்யுங்கள்.
  • “ஒரு பெண் தன் கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்துவிட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள்” என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள் (திர்மிதி, இப்னுமாஜா).
மொழிபெயர்ப்பாளன் குறிப்பு :
இல்லறத்தைப் பற்றி எண்ணற்ற கட்டுரைகள் வெளிவந்துள்ள இவ்வேளையிலே, பல செய்திகளை சுருக்கி, குறிப்புகளாகக் கொடுத்திருப்பது தேவையான ஒன்றுதான். குர்ஆன் மற்றும் நபிமொழிகள் இந்தக் குறிப்புகள் முழுதிலும் மறைந்திருப்பது உள்ளங்கை நெல்லிக்கனியே. இருந்தாலும் அவசியமான குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் மட்டும் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இது தமிழ் பேசும் நம்மவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறேன். மொழிபெயர்ப்பை வரிக்கு வரி செய்யாமலும் தேவையானதைச் சேர்த்தும் இருப்பதால் இதனை ஒரு தொகுப்பாகவே பார்க்கவும்.
- சகோ. முஃப்தி

மனைவியை மகிழ்விப்பது எப்படி?


மனைவியை மகிழ்விப்பது எப்படி?

எழுதியவர்/பதிந்தவர்/உரை 
தமிழில்: Mufti
(குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் ஆணும் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை)
அழகிய முகமன்
  • வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.
  • மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட.அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி ‘முஸாபஹா’ செய்யலாம்.
  • வெளியில் சந்தித்த நல்ல செய்திகளைத் தெரிவித்துவிட்டு மற்ற செய்திகளை வேறு சந்தர்ப்பத்திற்காகத் தள்ளி வையுங்கள்.
இனிப்பான சொல்லும் பூரிப்பான கனிவும்
  • நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.
  • உங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள்.
  • தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.
  • மனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழைக்கலாம்.
நட்பும் இனிய நிகழ்வுகளை மீட்டுதலும்
  • மனைவிக்காக நேரத்தை ஒதுக்குங்கள்.
  • நல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
  • நீங்களிருவரும் ஆனந்தமாகக் கழித்த அனுபவங்களை இருவரும் தனித்து இருக்கும்பொழுது மீட்டிப் பாருங்களேன்.
விளையாட்டும் கவன ஈர்ப்பும்
  • நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.
  • ஒருவருக்கொருவர் போட்டி போட்டு, பந்தயங்களில் ஈடுபடுங்கள். அது விளையாட்டாகவோ, குர்ஆன், நபிமொழி, பொதுஅறிவு போன்ற கல்விகளைக் கற்பதிலோ அல்லது வேலை செய்வதிலோ இருக்கலாம்.
  • இஸ்லாம் அனுமதித்த விஷயங்களை (விளையாட்டுப் போட்டிகள் போன்றவை…) பார்ப்பதற்கு வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.
  • இஸ்லாம் அனுமதிக்காத ‘பொழுது போக்கு” விஷயங்களில் (சினிமா, ஸீரியல்கள் போன்றவற்றில்) உள்ள தீங்குகளை எடுத்துச் சொல்லி அவற்றை மறக்கடியுங்கள்.
வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவ
  • வீட்டு வேலைகளில் எதிலெல்லாம் மனைவிக்குத் துணைபுரிய முடியுமோ அதிலெல்லாம் உதவுங்கள். மிக முக்கியமாக அவள் நோயுற்றோ களைப்படைந்தோ இருந்தால்.
  • கடினமான வீட்டு வேலைகளில் மனைவி ஈடுபடும்பொழுது நன்றி தெரிவித்து அவளை உற்சாகப் படுத்துங்கள்.
இனியவளின் ஆலோசனை
  • குடும்ப விஷயங்களில் உங்கள் மனைவியுடன் கூடிஆலோசனை செய்யுங்கள்.
  • அவளிடம் ஆலோசனை செய்யப்பட வேண்டும் என அவள் எதிர்பார்க்கும் சிறப்புத் தருணங்களில் அவளின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள் (பிள்ளைகளின் திருமண விஷயங்கள் போன்றவை)
  • மனைவியின் கருத்துக்களை துச்சமாக நினைக்காமல் கவனமாகப் பரிசோதியுங்கள்.
  • மனைவின் கருத்து சிறந்ததாக இருந்தால் (உங்கள் கருத்தை புறந்தள்ளிவிட்டு) அவளின் கருத்தைத் தேர்ந்தெடுக்க தயக்கம் காட்டாதீர்கள்.
  • ஆலோசனை தந்து உதவியதற்காக அவளுக்கு நன்றி கூறலாம்.
பிறரைக் காணச் செல்லும்பொழுது
  • மார்க்கத்தில்/பழக்கத்தில் உயர்ந்த பெண்களுடன் தோழமை வைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். மேலும் உறவினர்களைப் பார்க்கச் செல்வதால் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துங்கள் (பார்க்கச் சென்றவர்களிடம் வீணான பேச்சுக்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்கினால் கண்டியுங்கள்).
  • அங்கு இஸ்லாமிய ஒழுக்கங்கள் பேணப்படுகின்றனவா என கவனித்துக் கொள்ளுங்கள்.
  • அவளுக்கு சங்கடம் தரக்கூடிய இடங்களுக்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்துவது நல்லதல்ல.
உங்களின் வெளியூர் பயணத்தின்பொழுது
  • மனைவிக்குத் தேவையான நல்ல அறிவுரைகளைக் கூறிவிட்டு அழகான முறையில் விடைபெறுங்கள்.
  • உங்களுக்காக இறைவனிடம் துஆ செய்யச் சொல்லுங்கள்.
  • நீங்கள் வீட்டில் இல்லாதபொழுது இரத்தபந்த உறவினர்களிடம் அவளுக்குத் தேவையான அவசியமான உதவிகளைச் செய்து தரும்படி கேட்டுக்கொள்ளலாம்.
  • குடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்துச் செல்லுங்கள்.
  • நீங்கள் வெளியூரில் இருக்கும் நாட்களில் டெலிபோன், கடிதம், ஈமெயில் போன்றவற்றின் மூலமாக மனைவியுடன் தொடர்பு கொள்ளுங்கள் (பிரிவின்பொழுதுதான் இருவருக்குமே ஒவ்வொருவரின் அருமையும் முழுமையாகப் புரியும். அப்பொழுது இவற்றின் மூலமாக நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வு, உங்களின் பரஸ்பர அன்பை வளர்க்கும்).
  • முடிந்தவரை சீக்கிரம் ஊர் திரும்ப முயற்சி செய்யுங்கள்.
  • திரும்பி வரும்பொழுது அவளுக்கு விருப்பமான பரிசுப் பொருள்களை வாங்கி வரலாம்.
  • எதிர்பாராத நேரத்திலோ இரவு நேரத்திலோ வீடு திரும்புவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் (உங்களுக்காக அலங்கரித்துக் கொள்ளாமல் இருப்பது அவளுக்கு சங்டத்தை ஏற்படுத்தும்).
  • பிரச்சினைகள் எதுவும் வராது என எண்ணினால் மனைவியையும் உடன் அழைத்துச் செல்லலாம்.
பொருளாதார உதவி
  • கணவன் என்பவன் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்பவனாக இருத்தல் வேண்டும்; மாறாக, கஞ்சத்தனம் செய்யக் கூடாது. (வீண் விரயமும் செய்யக் கூடாது).
  • அவளுக்கு ஊட்டிவிடும் உணவு முதல் அவளுக்காகச் செய்யும் அவசியச் செலவுகள்வரை அனைத்திற்கும் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • அவசியத் தேவைக்கான பணத்தை உங்களிடம் கேட்பதற்கு முன்னரே கொடுப்பதுதான் சிறந்தது.
அழகும் நறுமணமும்
  • நபிவழியின்படி அக்குள்முடி மற்றும் மறைவான பகுதியில் உள்ள முடிகளை நீக்கிவிடுவது.
  • எப்பொழுதும் நேர்த்தியாக அழகுபடுத்திக் கொண்டு சுத்தமாக இருப்பது.
  • அவளுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளுங்கள்.
தாம்பத்யம்
  • மனைவிக்கு தாம்பத்ய சுகம் கொடுக்க வேண்டியது கணவனின் கடமை என்பதை நினைவில் வையுங்கள் (இருவரில் ஒருவரின் உடல்நலக்குறைவு காரணமாகத் தள்ளிப் போட்டுக் கொள்ளலாம்).
  • பிஸ்மில்லாஹ் (இறைவனின் திருநாமத்தால்) என்று சொல்லி ஆதாரப்பூர்வமான பிரார்த்தனையைச் (ஷைத்தானின் தீங்கைவிட்டு இறைவனிடம் பிரார்த்தனை) செய்தவாறு ஆரம்பியுங்கள்.
  • இறைவன் படைத்திருக்கும் இன உறுப்பைத் தவிர்த்து வேறு வகைகளில் இல்லறச் சுகம் அனுபவிக்கக் கூடாது (மலப்பாதையின் வழியாக ஈடுபடுவது ஹராம்).
  • காதல் வார்த்தைகளுடன் முன்விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள்.
  • அவளை திருப்திப்படுத்தும் வரை தொடருங்கள்.
  • அமைதிக்குப் பிறகு நகைச்சுவையால் அவ்விடத்தைக் கலகலப்பாக்குங்கள்.
  • மாதவிடாய்க் காலத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடுவது ஹராம் (தடுக்கப்பட்டது).
  • பெண் என்பவள் அதிகம் வெட்கப்படுபவள். எனவே அவளின் கூச்சத்தை நீக்குவதில் எல்லை கடந்துவிடாதீர்கள்.
  • மனைவிக்கு விருப்பமற்ற, கஷ்டமான கோணங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.
  • அவளின் நோய் மற்றும் களைப்படைந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுங்கள்.
இரகசியங்களைப் பாதுகாத்தல்
  • படுக்கையறை விஷயங்கள் மற்றும் அவளின் சொந்தப் பிரச்சினைகள் போன்றவற்றை பிறரிடம் எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்தாதீர்கள்.
இறைவனுக்கு கட்டுப்படும் விஷயங்களில் உதவியாக இருப்பது
  • தஹஜ்ஜத் (இரவு) தொழுகைக்காக இரவின் கடைசிப்பகுதியில் எழுப்புங்கள்.
  • உங்களுக்குத் தெரிந்த திருக்குர்ஆன் அறிவை அவளுக்கும் போதியுங்கள்.
  • காலை-மாலை நேரங்களில் ஓதக்கூடிய திக்ரு (இறைநினைவுகளை – நபியவர்கள் காட்டித் தந்தவைகளை மட்டும்) அவளுக்கு போதியுங்கள்.
  • இறைவனின் பாதையில் செலவு செய்வதற்கு ஆர்வமூட்டுங்கள்.
  • ஹஜ்/உம்ராவிற்கு (பணம் மற்றும் உடல்) சக்தி பெற்றிருந்தால் அழைத்துச் செல்லுங்கள்.
  • மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மரியாதை செய்யுங்கள்.
  • அவளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களைப் பார்க்க அழைத்துச் செல்லுங்கள்.
  • உங்களின் வீட்டுக்குவர அவர்களுக்கு அழைப்புக் கொடுங்கள். அப்படி வரும்பொழுது அன்புடன் வரவேற்று உபசரியுங்கள்.
  • அவசியமான தருணங்களில் அவர்களுக்கு ஒத்தாசையாக இருங்கள்.
  • பொருளாதாரம் மற்றும் உங்களின் சக்திக்குட்பட்ட உதவிகளைச் செய்யுங்கள்.
  • உங்களுக்கு முன் மனைவி மரணித்துவிட்டால் நபியவர்களின் வழிமுறையைப் பேணி மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மனைவி (உயிருடன் இருக்கும்பொழுது) உதவி செய்ததுபோல் செய்து அன்பு பாராட்டுங்கள்.
இஸ்லாமியப் பயிற்சி
கீழே கொடுக்கப்பட்டவைகளை அறிந்து கொள்வதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது :
  • இஸ்லாத்தின் அடிப்படை
  • அவளின் பணிகள் மற்றும் உரிமைகள்
  • படித்தல் மற்றும் எழுதுதல்
  • இஸ்லாமியப் பாடங்களை மற்றும் அதன் நுணுக்கங்களை படிப்பதற்காக ஆர்வமூட்டுவது
  • பெண்கள் சம்பந்தமான இஸ்லாமிய சட்டங்கள்
  • வீட்டின் இஸ்லாமிய நூலகத்திற்காக புத்தகங்கள் மற்றும் கேஸட்டுகள் வாங்குவது.
மேன்மையான அக்கறை
  • வெளியில் போகும்பொழுது இஸ்லாமிய முறைப்படி பர்தா அணிந்திருக்கின்றாளா எனக் கவனித்துக் கொள்வது.
  • மஹரம் அல்லாத ஆண்களின் மத்தியில் கலந்திருப்பதைக் கண்டிப்பது. (அவளின் சிறிய மற்றும் பெரிய தந்தை மகன்களாக இருந்தாலும் சின்னம்மா பெரியம்மா மகன்களாக இருந்தாலும் உங்களின் தம்பியாக இருந்தாலும் தவறுதான்).
  • அதிகப்படியாகத் துருவி ஆராய்தலைத் தவிர்ந்து கொள்வது. (உதாரணமாக, அவளின் ஒவ்வொரு பேச்சிலும் குற்றங்குறைகளை ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள். மனப்பூர்வமாக இல்லாமல் வாய் தவறிக்கூட பிழையாகப் பேசியிருக்கலாம்).
  • அவசர விஷயத்திற்காக அண்மையில் உள்ள இடங்களுக்குப் போவதைத் தடுக்காதீர்கள். (ஆனால் ஹிஜாப் பேணப்பட வேண்டும்)
  • நீங்கள் அருகில் இல்லாததால், தொலைப்பேசிக்கு பதில் அளித்ததற்காக கண்டிக்காதீர்கள். (குழைந்து பேசக்கூடாது என்று எச்சரிக்கை செய்யுங்கள்)
பொறுமையும் சாந்தமும்
  • மணவாழ்வில் கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபங்கள் வருவது சாதாரண விஷயம்தான் (வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதுபோல ஒவ்வொரு வீட்டிலும் இவை ஒவ்வொரு உருவத்தில் உலாவருகின்றன).  அதிகப்படியான பொறுப்புகளில் உட்படுத்துவதும் சிறிய விஷயங்களைப் பெரிதாக்குவதும் போன்றவைதாம் திருமண பந்தத்தை முறித்துவிடும் அளவுக்குச் சென்று விடுகிறது.
  • இறைவன் விதித்த வரம்புகளை மீறும்போது கோபம் காட்டப்பட வேண்டும்.  (உதாரணமாக தொழுகையைத் தாமதப்படுத்துதல், புறம் பேசுதல், தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்களை டி.வியில் பார்த்தல் இது போன்றவை).
  • உங்களின் விஷயங்களில் செய்த தவறுகளை பெருந்தன்மையுடன் மன்னித்துவிடுங்கள்.
தவறுகளைத் திருத்துதல்
  • முதலில் (முழுமனதோடு) நல்லுபதேசம் செய்யுங்கள்.
  • அதிலும் திருந்தாவிட்டால், தாம்பத்யத்தில் ஈடுபடாது கட்டிலில் திரும்பிப் படுத்துக் கொள்ளுங்கள். (உங்களின் கோப உணர்வை இவ்வாறு வெளிப்படுத்துவது) அதற்காக, படுக்கையறையை விட்டு வெளியேறுவதோ, வீட்டைவிட்டு வெளியில் சென்றுவிடுவதோ அல்லது அவளிடம் பேசாமல் இருப்பதோ அல்ல.
  • அதிலும் திருந்தாவிட்டால், கடைசி முயற்சியாக காயம் ஏற்படாமல் இலேசாக அடிக்கலாம் (அதற்கு அவள் தகுதியானவளாக இருந்தால் மட்டும்).
  • மனைவியை அடிப்பது நபிவழியில் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் என்றும் நபியவர்கள் மனைவியை அடிப்பவர்களாக இருக்கவில்லை என்பதையும் ஒவ்வொரு கணவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
  • மனைவி (எந்தக் காரணமும் இன்றி தாம்பத்தியத்திற்கு மறுத்தல், தொடர்ந்து தொழுகையை அதன் நேரத்தில் தொழாமல் இருத்தல், கணவனின் அனுமதியின்றி வீட்டைவிட்டு அதிக நேரத்திற்கு வெளியில் செல்லுதல் அல்லது எங்கே சென்றிருந்தாள் என்பதைக் கணவனுக்குச் சொல்ல மறுத்தல் இது போன்ற விஷயங்களில்) கட்டுப்பட மறுத்தால் கணவர் இந்த அனுமதியைப் பயன்படுத்தலாம்.
  • குர்ஆனில் (4-வது அத்தியாயம் 34-ம் வசனத்தில்) கூறப்பட்டதுபோல் அவளுக்கு நல்லுபதேசம் செய்து படுக்கையிலிருந்து விலக்கி அதில் திருந்தாவிட்டால்தான் அடிக்கும் அனுமதியை கணவர் பயன்படுத்தலாம்.
  • காயம் உண்டாகும்படியோ முகத்திலோ மற்றும் மென்மையான பகுதியிலோ அடிக்கக் கூடாது.
  • செருப்பினால் அடிப்பது போன்ற மானபங்கப்படுத்தும் செயல்களில் ஒருக்காலும் ஈடுபடக் கூடாது.
மன்னிப்பும் கண்டிப்பும்
  • பெரிய தவறுகளை மட்டும் கணக்கில் எடுங்கள்.
  • உங்களின் விஷயத்தில் தவறு செய்தால் மன்னித்துவிடுங்கள். இறைவனின் விஷயங்களில் தவறு செய்தால் கண்டிக்கத் தவறாதீர்கள்.
  • தவறு செய்யக்கூடிய நேரங்களில் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய மற்றும் அவளின் நற்பண்புகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் (உங்களின் கோபம் குறையலாம்).
  • எல்லா மனிதர்களும் தவறு செய்யக்கூடியவர்கள்தாம். எனவே மன்னிக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். (மனச்சோர்வு, களைப்பு, மாதவிடாய் போன்றவற்றின் மன-உடல் உளைச்சல்களினால் தவறுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு).
  • சமையல் சரியில்லை என்ற காரணத்திற்காக மனைவியைக் கடிந்து கொள்ளாதீர்கள். நபியவர்கள் சமையல் விஷயத்திற்காக மனைவியைக் கண்டித்ததே இல்லை. பிடித்தால் சாப்பிடுவார்கள், பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாமல் இருந்துவிடுவார்கள்; தவிர எந்த விமர்சனமும் செய்ய மாட்டார்கள்.
  • தவறுகளை நேரிடையாக அவளிடம் வெளிப்படுத்துவதற்குமுன் வேறுவழியில் நயமாகச் சுட்டிக்காட்டுங்கள். ஏனென்றால் சில நேரத்தில் இது பயனுள்ளதாக இருக்கும்.
  • அவமரியாதை செய்யக்கூடிய வகையில் மனைவியைத் திட்டுவதைத் தவிர்ந்துக் கொள்ளுங்கள்.
  • பிரச்சினை பேசி தீர்த்துக் கொள்ளக்கூடியதாக இருந்தால், தனிமை கிடைக்கும்வரை பொருத்திருங்கள்.
  • மனைவிமீது கோபம் ஏற்பட்டால், உங்களை சரியான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவற்காக கோபம் குறையும்வரை சற்றுப் பொறுமை கொள்ளுங்கள்.
(உங்கள் இல்லறம் இனிமையாகத் தொடர நல்வாழ்த்துகள்!)