Wednesday 28 November 2018

*பூமான் நபிகள் சொன்ன* *பொருளாதாரத் திட்டம்*

☄☄☄☄🌈☄☄☄☄

*பூமான் நபிகள் சொன்ன*
 *பொருளாதாரத் திட்டம்*

☄☄☄☄🌈☄☄☄☄




திருத் தூதர் வழிகாட்டிய ஏழ்மையும், வறுமையும் என்பது, நம்மை நாமே வதைத்துக் கொள்ளும் ஒரு வகை சுயவதை அல்ல. மாறாக, இருப்பதை இல்லாத மக்களுக்கு பகிர்ந்தளித்து விட்டு அடுத்த நாளைக்கு படைத்தவனை நம்பி உறங்கச் செல்லும் உத்தமப் பண்பு அது.

காரணம், இந்த உலகத்தில் உள்ள எந்தப் பொருளும் நாம் படைத்தது அல்ல. இவை அனைத்துமே வல்ல இறைவன் படைத்த பொருட்கள் தான். வல்ல இறைவன் படைத்த பொருள்களின் மீது நமது உழைப்பைச் செலுத்தி, நாம் அதை இன்னொரு பொருளாக மாற்றுகிறோம். எனவே, இங்கு மூலப் பொருள் என்பது இறைவன் தந்ததுதான். ஏன் ? அதன் மீது நாம் செலுத்தும் உழைப்பும் கூட இறைவன் தந்த சக்தியின் புற வடிவம் தான் .

அப்படி இருக்க,
இங்கு பொருளும் நம்முடையதல்ல. உழைப்பும் நம்முடையதல்ல.
ஏன்? நாமே கூட நம்முடையதல்ல.

இந்த சூழலில், 
நான் உழைத்தேன், நான் உருவாக்கினேன்,  நான் சேர்த்து வைக்கிறேன் என்பதெல்லாம் ஒரு எல்லைக்கு வெளியே நின்று பார்க்கும் போது இவை அத்தனையுமே கேலிக் குறியதாகி விடும். இப்படிப் பார்க்க நமக்கு ஒரு வகை மனப் பக்குவம் வேண்டும்.

இதை உணர்ந்த மேன் மக்கள் தான் , அன்றைய உழைப்பை அன்றே தானம் செய்து விட்டு அடுத்த வேளைக்கு ஆண்டவனிடம் போய் நிற்பார்கள்.

அதற்காக, வணிகம் செய்து செல்வம் சேர்ப்பதை கூடாத செயலாகப் பார்க்க கூடாது. இந்த உலகம் என்னும் வர்த்தக உருண்டையை சுழலச் செய்வதே இந்த வணிக செயல்பாடுகள் தான்.
எனவே, சக்தி உள்ளவரை வணிகத்தை மேன்மைப் படுத்தி, அதன் மூலம் வருகின்ற  செல்வத்தை மலையளவு சேர்த்து வை. இந்தப்
பரந்த பூமிப் பரப்பில் பயணம் செய்து உன் செல்வாக்கை நிலை நாட்டு.ஆனால், அந்த செல்வத்தை செயல் இழக்கும் வகையில் கொண்டு போய்  dead investment- ஆக முடக்கி  வைத்து விட வேண்டாம். அதனை தொடர்ச்சியான பொருளாதார மாற்றத்திற்கு உட்படுத்து. ஒரு மிகப் பெரிய பொருளாதார சுழற்ச்சியை உன்னைச் சுற்றி உருவாக்கி அதன் மையப் பகுதியில் நின்று கொள்.
இப்பொழுது தான் உன் உழைப்பும், உன் செல்வமும் உன் கண்களுக்கு பேரழகாகத் தெரியும். அதன் ஒளித் திவலைகள் எல்லாம் உனக்கு மறுமைக்கான வீதி விளக்குகளாக மாறும். இதுதான் இம்மையை வளப்படுத்தி அதன் வழியாக மறுமையை வசப்படுத்தும் உயரிய வித்தை.

அதற்கான மூல சூத்திரம் தான் *"ஜக்காத்"* எனும் உயரிய பொருளாதாரத் திட்டம் என்பது. இதன் மூலம் உன்னைச் சுற்றி இயங்கி வரும் சிறு தொழில்களை
( cottage industries ),
புதிய முயற்சிகளை ( start-up )
புதிய காலத் தேவையான கண்டு பிடிப்புகளை ( innovative development) எல்லாம் உன் முதலீட்டைக் கொண்டு உயிர்த்தெழச் செய். அப்பொழுதான் இந்த உயரிய பொருளாதாரத் திட்டம் பொலிவு பெறத் தொடங்கும். இந்த பொருளாதார  திட்டத்தின் தத்துவமே இந்த diversification- தான்.  அதுவரையிலும், இது வெறும் தர்மக் கணக்காக மட்டுமே நீடிக்கும்.

நம்மில் எத்தனை பேர் இந்த திட்டத்தில் இணைந்து இதனை ஆக்கப்பூர்வமான திட்டமாக மாற்றத் தயாராக உள்ளோம் ?  அல்லது ஏற்கனவே இதில் இணைந்து அதனை ஆக்கபூர்வமாக பயன் படுத்தி வருகிறோம் ?

*சொல்லை விட செயல் அழகானது*

☄☄☄☄🌈☄☄☄☄

No comments:

Post a Comment