Rahi Kamal
Keep Learning and Share to All.
Wednesday, 20 August 2014
கணவனின் கண்ணியத்தைக் காப்பாற்றுங்கள் – முபல்லிகா ஏ.ஓ. நஜாத் முனவ்வரா, முதுகுளத்தூர்
சில குடும்பங்களில் கணவனின் கண்ணியத்தை மனைவி கண்டுகொள்வதே இல்லை. கணவனின் மீது குறை கூறித் தன் பக்கம் இரக்கத்தைச் சம்பாதிப்பதையும் சில மனைவிகள் அறிவான செயலாக நினைக்கிறார்கள். இது அந்த மனைவிக்கே
அவமானம் என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. போதுமான அளவுக்கு கணவன் சம்பாதித்துப் போட்டாலும் அதிலும் சில குறைகளைக் கூறும் மனைவிகளும் இருக்கிறார்கள்.
சில குடும்பங்களில் அமைதியும் அடக்கமும் நிறைந்த கணவனுக்கு அடங்காப்பிடாரித் தனமான மனைவிகள் வந்து அந்த கணவனின் கண்ணியத்தைப் பாழ்படுத்தி விடுகிறார்கள். கட்டிய மனைவியின் அட்டகாசமான பேச்சும் ஆடம்பரமான வாழ்வும், பெருமையான போக்கும், பண்பு தவறிய நடத்தையும் கண்ணியமான கணவனையும் தலைகுனியச் செய்துவிடுகிறது.
சில குடும்பத்தில் இப்படிப்பட்ட பெண்கள் நுழைந்து ஆட்டம் போட்டு, ஆடமட்டும் ஆடி, பாடமட்டும் பாடி, ஓடி ஆடி ஓய்ந்த பின்பு, அன்பு பண்பு பாசம் அனைத்தையும் இழந்துவிட்டு ஒதுக்கப்பட் குப்பைகள் போல கேட்பாரற்று ஆகிவிடுகிறார்கள். பின்னால் யோசித்துப் பிரயோசனம் இல்லாமல் போய்விடுகிறது.
கணவனின் கண்ணியத்தையும் குடும்பத்தின் கவுரவத்தையும் பாதுகாக்கும் பெண்ணுக்கு இயற்கையாகவே இறைவன் தனி மதிப்பைக் கொடுப்பான். கணவனின் கண்ணியத்தைக் கெடுத்து குடும்பத்தின் கவுரவத்தையும் கெடுத்துவரும் பெண்ணுக்கு அவளை அறியாமலேயே அவள் பின்னால் இழிவு எழுந்து நிற்கும்.]
கணவனின் கண்ணியத்தைக் காப்பாற்றுங்கள்:
நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அவைக்கு ஒரு பெண்மணி வந்தார். ‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஒரு சக்களத்தி இருக்கிறாள். அவளை எரிச்சல் ஊட்டி கோபப்படுத்த வேண்டும். அதற்காக என் கணவர் எனக்குக் கொடுக்காத ஒரு பொருளை என் கணவர் எனக்குக் கொடுத்தார் என பொய் சொல்லட்டுமா? இது பாவமா?’ என்று கேட்டார்.
இதைக்பேட்ட அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ஒருவர் ஒரு பொருளை கொடுக்காத நிலையில் அவர் அதைக் கொடுத்தார் என்று சொல்வது மோசடியான உடையை அணிந்து கொள்வதற்குச் சமமாகும் (அது ஒரு மோசடிச் செயலாகும்).’ என்று கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம், நஸஈ, அபூதாவூத்)
ஒருவரை ஒருவர் ஏமாற்றம் அடையச் செய்வதற்கோ கோபம் அடையச் செய்வதற்கோ பொய்யை ஆயுதமாகக் கொள்ளக் கூடாது. மேலும் ஒரு கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட இரு மனைவிகளுக்கிடையே கோப உணர்வு நடமாடக்கூடாது. இருவர் மனதிலும் கோபக்கனலின் பொறி கூடச் சிதறக் கூடாது என்பதில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவனமாக இருந்திருக்கிறார்கள்.
வெளிப்படையில் நல்லது போன்றும் நன்மை போன்றும், உள் நிலையில் கெட்டதாகவும் தீயதாகவும் இருக்கும் சொல், செயல், நினைப்பு அனைத்துமே மோசடியானது தான். இந்த மோசடி, குடும்பங்களுக்கு மத்தியில் குடிபுகுந்து விடக் கூடாது. பெண்களுக்கு நடுவே விளையாட்டுக்குக் கூட ஏமாற்றமான பேச்சுவார்த்தைகள் வெளியாகக் கூடாது. அது ஒருசமயம் சாதாரண விஷயமாகவும், சிலசமயம் பயங்கர விஷயமாகவும் ஆகிவிடும்.
நகைச்சுவைக்காக சின்ன விஷயங்களில் பொய் சொல்லிவிட்டு அது பொய் என்று தெரிந்த பிறகு அந்தப் பெண் மீது இருக்கும் அன்பும் நம்பிக்கையும் பாதிக்கப்படும். பிறகு ஏதாவது ஒரு விஷயத்தில் உண்மை சொல்லும் நேரத்திலும் ஒரு செய்தியை நிலைநாட்டத் துடிக்கும்போதும் தோற்றுப்போகும் நிலையை உருவாக்கிவிடும். அந்த நேரத்தில் எந்த முகாந்தரமும் எடுபடாது போய்விடும்.‘நெருப்பு விரகைத் தின்று விடுவதுபோல பொய் பேசுவது இறைநம்பிக்கை எனும் ஈமானைத் தின்றுவிடும்.’ என அறிவுறுத்தப்படுகிறது.
‘பொய் சொன்னால் போஜனம் கிட்டாது’ என்று நாட்டுவழக்கில் சொல்வார்கள். இத்தனை மோசமான ஒரு செயலை இரு பெண்களுக்கு மத்தியில் செயல்படுத்த விடக்கூடாது. பெண்கள் வாழ்வில் எத்தனையே உண்மைகள் கூட செத்துப்போய் விடுகின்றன. சந்தேகப் புயல்களால் உண்மை சாய்ந்துவிடுகிறது. சத்தியங்கள் தோற்றுப்போய் விடுகின்றன.
அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளுடன் பல்லாண்டுகள் வாழ்ந்தபோதும் கூட அவர்களை திருப்தி படுத்துவதற்காக பொய்களைக் கேடயமாக எடுத்துக் கொண்டதில்லை. உண்மையையும் சத்தியத்தையும் கடைப்பிடித்த காரணத்தால் தான் அத்தனை வாழ்க்கைத் துணைவிகளையும் எளிமை நிலையிலும் செழிப்பான நினைவுகளுடன் வாழச்செய்ய முடிந்தது.
அல்குர்ஆன் எச்சரிக்கிறது :
ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியைத் தனது தேவைக்காகக் கட்டிக்கொள்ள முனையும் ஆண்மகன் அவர்கள் நடுவே நீதத்துடன் நடக்க வேண்டும். அப்படி நீதத்துடன் நடக்க முடியாது என்ற பயம் இருந்தால் அவன் ஒரு பெண்ணை மட்டுமே மணந்துகொள்வது போதும் என்று இறைவேதம் எச்சரிக்கின்றது.
இரண்டு ‘பெண் உணர்வுகள்’ ஒன்றை ஒன்று மோதிக் குடும்பங்களில் குழப்பத்தை உண்டாக்கிவிடக் கூடாது என்பதில் இஸ்லாம் விழிப்பாக உள்ளது. அதனால் தான் ஒன்றுக்கும் மேல் இன்னொரு பெண்ணை மணமுடிக்கும் நிலைக்கு ஒரு மனிதன் தள்ளப்பட்டாலும் முன்பு மணமுடித்திருக்கும் மனைவியின் உடன்பிறந்த சகோதரியைத் திருமணம் முடிக்க தடுத்து நிறுத்தி இருக்கிறது. அதாவது அக்கா தங்கையான உடன்பிறப்பை ஒரே மனிதன் மனைவியாக்கிக் கொள்ளக் கூடாது.
தங்கத்தை கூடத் தியாகம் செய்து தாரை வார்த்துக் கொடுக்கும் தங்க குணம் கொண்ட நமது தாய்க்குலத்திற்கு தாம்பத்ய வாழ்வை மட்டும் பங்களிக்கும் நிலையைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அதனால் மன உணர்வு பாதிக்கப்பட்டு பழி பகை என்று பலவித பாதகங்கள் விளைந்து விடுகின்றன.
எந்த நிலையிலும் ஒரு கணவனின் கண்ணியம் சிதைந்து போய்விடக் கூடாது என்பதில் மனைவி கவனமாக நடந்து கொள்ள வேண்டும். கணவனின் மானத்தை மறைக்கும் ஆடையல்லவா மனைவி! கணவனின் மானத்தை மறைக்கும் ஆடைபோல மனைவியும், மனைவியின் மானத்தை மறைக்கும் ஆடை போலக் கணவனும் இணைந்து செயல்பட்டால் குடும்ப கவுரவம் என்றுமே நிமிர்ந்து நிற்கும்.
பொடுபோக்கு மனைவி :
சில குடும்பங்களில் கணவனின் கண்ணியத்தை மனைவி கண்டுகொள்வதே இல்லை. கணவனின் மீது குறை கூறித் தன் பக்கம் இரக்கத்தைச் சம்பாதிப்பதையும் சில மனைவிகள் அறிவான செயலாக நினைக்கிறார்கள். இது அந்த மனைவிக்கே அவமானம் என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. போதுமான அளவுக்கு கணவன் சம்பாதித்துப் போட்டாலும் அதிலும் சில குறைகளைக் கூறிக் கணவன் மனதை கசக்கிப் பிழியும் மனைவிகளும் இருக்கிறார்கள்.
‘கணவன் சம்பாத்தியம் போதவில்லை’ என்று பொய் கூறினால் யார் கொடுத்து ஈடுகட்டத் துணிவார்கள்? கொடுக்க நினைக்கும் உறவு முறை கூட கேவலமாக நினைக்க மாட்டார்களா?
‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’
என்ற நிலையில் கணவனின் சம்பளம் குறைவாக இருந்தாலும் நிறைவான மனதுடன் அதைக்கொண்டு குடும்பம் நடத்தும் பெண்ணுக்கு அதில் அதிகமான பரக்கத் – அபிவிருத்தியை அல்லாஹ் கொடுப்பான் அல்லவா? இது தன்னைக் கட்டிய கணவருக்குக் கண்ணியம் சேர்க்கும் அணிகலன் என்பதை பெண்கள் நினைத்துப்பார்க்க வேண்டும்.
சில குடும்பங்களில் அமைதியும் அடக்கமும் நிறைந்த கணவனுக்கு அடங்காப்பிடாரித் தனமான மனைவிகள் வந்து அந்த கணவனின் கண்ணியத்தைப் பாழ்படுத்தி விடுகிறார்கள். கட்டிய மனைவியின் அட்டகாசமான பேச்சும் ஆடம்பரமான வாழ்வும், பெருமையான போக்கும், பண்பு தவறிய நடத்தையும் கண்ணியமான கணவனையும் தலைகுனியச் செய்துவிடுகிறது.
ஊரில் பெருமையான குடும்பத்தில் உள்ள கணவன், கட்டி வந்த பெண்ணால் சிறுமைப்பட நேரிடுகிறது. கச்சிதமான குடும்பத்தில் ஆடம்பரமான மருமகள் வந்து அனைத்தையும் சீரழித்துவிடும்படி ஆகிவிடுகிறது. ஒற்றுமை மிகுந்த குடும்பத்தில் உதவாக்கரையான பெண் வந்து அனைவரையும் அக்கு வேறு ஆணி சேராகக் கழற்றி விட்டு ஓடும் நிலை ஏற்பட்டு விடுகிறது.
சில குடும்பத்தில் இப்படிப்பட்ட பெண்கள் நுழைந்து ஆட்டம் போட்டு, ஆடமட்டும் ஆடி, பாடமட்டும் பாடி, ஓடி ஆடி ஓய்ந்த பின்பு, அன்பு பண்பு பாசம் அனைத்தையும் இழந்துவிட்டு ஒதுக்கப்பட் குப்பைகள் போல கேட்பாரற்று ஆகிவிடுகிறார்கள். பின்னால் யோசித்துப் பிரயோசனம் இல்லாமல் போய்விடுகிறது.
நல்ல மருமகள் :
சில குடும்பங்களுக்கு மருமகளாகப் புகுந்து வரும் பெண்கள் மருமகள் எனும் நிலையைவிட அந்த வீட்டின் மகளாகவே வாழ்ந்து காட்டுகிறார்கள். மாமியாரையும், மாமனாரையும் எந்த வித்தியாசமும் இல்லாமல் பெற்றெடுத்த தாய் தந்தையாகவே போற்றி மகிழ்கிறார்கள். கணவனுடன் பிறந்த நாத்தனார், கொழுந்தனார்களைத் தன்னுடன் பிறந்த சகோதர சகோதரிகளாகவே மதித்துப் பணிவிடை செய்து நற்பெயர் எடுத்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட மருமக்கமார்கள் குடும்பத்தின் ஒளிவிளக்காக விளங்குகிறார்கள். இப்படிப்பட்ட மருமகள்கள் வாழ்கின்ற வீடு சொர்க்கமாக இருக்கும்.
சில எளிமை மிக்கக் குடும்பத்தில் வாழ வந்த மருமகள் கூட ஏதேனும் கைத்தொழில் செய்து தன் கணவனின் கண்ணியம் காத்து மகிழ்கிறார்கள். சிலர் பலகாரங்கள் செய்து குடும்பச் செலவுக்கு ஈடுகட்டுகிறார்கள். சிலர் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்து கணவன் சுமையைக் குறைக்கிறார்கள். கிராமப்புற மருமக்கள் கூட கோழி வளர்த்து குடும்பச் செலவை சரிசெய்து கொள்கிறார்கள். இதையெல்லாம் அவர்கள் சுமையாக நினைப்பதில்லை. சுவையான வாழ்வாகவே நினைக்கிறார்கள்.
குடும்பக் கண்ணியத்தை கட்டிக் காக்க வேண்டும் என்று எண்ணும் பெண்களுக்கு இறைவன் என்றுமே துணை இருப்பான். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பரக்கத்தும் அவர்களுக்குக் கிடைக்கும். கணவனும் மதிப்பார். கணவனைப் பெற்றெடுத்த மாமனாரும், மாமியாரும் மதிப்பார்கள். உற்றார் உறவினர்களும் மதிப்பார்கள்.
பெண்களாகிய நமது சகோதரிகள் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். கணவனின் கண்ணியத்தையும் குடும்பத்தின கவுரவத்தையும் பாதுகாக்கும் பெண்ணுக்கு இயற்கையாகவே இறைவன் தனி மதிப்பைக் கொடுப்பான். கணவனின் கண்ணியத்தைக் கெடுத்து குடும்பத்தின் கவுரவத்தையும் கெடுத்துவரும் பெண்ணுக்கு அவளை அறியாமலேயே அவள் பின்னால் இழிவு எழுந்து நிற்கும்.
குடும்பப் பெண்கள் இதை உணரந்து ஒவ்வொரு நாளும் கடமை உணர்வுடன் நடந்தால் கண்ணியம் அவர்கள் காலடியில் வந்து விழும். இது குடும்ப வாழ்வில் நாம் காணும் உண்மை.
நன்றி:-
முபல்லிகா ஏ.ஓ. நஜாத் முனவ்வரா, முதுகுளத்தூர்
நன்றி:- http://udayanadu.wordpress.com/
நன்றி:- http://www.konulampallampost.blogspot.com/2012/02/blog-post_11.html
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment